மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் துலா உற்சவ விழா - பக்தர்கள் தரிசனம்!
துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
மாயூரநாதர் கோயிலில் துலா உற்சவம் நிகழ்வு தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயிலம்மன் பூஜையில், அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமி மாயூரதாண்டவம் ஆடிய நிகழ்வும் நடந்தேறியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருவீதியுலா நடைபெற்றது. இதில், கருட வாகனத்தில் பரிமளா ரெங்கநாதரும், அன்னபச்சி வாகனத்தில் ஆண்டாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.
வதான்யேஸ்வர சுவாமி கோயிலில் துலா உற்சவத்தையொட்டி சகோதர தரிசன காட்சி நடைபெற்றது. இதில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வதான்யேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத்தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் சுவாமி, அம்பாளின் வீதியுலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வீடுதோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.