மருத்துவக் கல்லூரிகளில் போலிச் சான்றிதழ் முறைகேடு!
தமிழகத்தில் போலி என்ஆர்ஐ சான்றிதழ்களை சமர்ப்பித்து மருத்துவக் கல்லூரிகளில் ஒருசிலர் முறைகேடாக சேர்ந்தது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் உறுதியாகி உள்ளது.
மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் காயத்ரி தலைமையில் தமிழகத்தில் எட்டு கல்வி நிறுவனங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் வெளிநாடுவாழ் இந்தியர் என்ற சான்றிதழை போலியாக சமர்ப்பித்து ஒரு சிலர் எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தது கண்டறியப்பட்டது.
அவர்கள் சமர்ப்பித்த என்ஆர்ஐ சான்றிதழ் போலியானது என்பதை அமெரிக்கா, துபாய், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தூதரகங்களும் உறுதி செய்துள்ளன. தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்காக விண்ணப்பித்தவர்களில் 44 மருத்துவர்களின் என்ஆர்ஐ சான்றிதழ் போலியானது என கடந்த ஆண்டு நவம்பரில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்திருந்தது.
இதுதவிர ஆறு எம்பிபிஎஸ் மாணவர்கள் தூதரக சான்றிதழை போலியாக தயாரித்ததும், அதில் மூன்று பேருக்கு சுயநிதி கல்லூரிகளில் இடம் கிடைத்த நிலையில், சேர்க்கை ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.