மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்!
உடல்நலக்குறைவால் காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது.
Advertisement
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கடந்த நவம்பர் 11ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 10.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உயிர் பிரிந்தது.
இதையடுத்து, அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல், இன்று மாலை 4 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.