மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்காத திறனற்ற திமுக நிர்வாகம் - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரிவர செய்திருந்தால் அமைச்சரின் மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஎச்பி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், மாலை விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக பொறுப்பாக முடியாது என்றும், மக்கள் கொண்டுள்ள கோபம் காரணமாகவே அத்தகைய சம்பவம் அரங்கேறியதாகவும் தெரிவித்தார்.
திமுகவின் நிர்வாகத் திறமையின்மையால் நடந்த சம்பவத்தை அரசியலாக்க பாஜக விரும்பவில்லை என்றும், சேற்றை பூசிக்கொள்ளும் அரசியல் அவர்களுக்கானது எனவும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
மழை வெள்ள காலத்தில் மக்களை பாதுகாக்காத திறனற்ற நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் விமர்சித்தார். திமுக அரசு இந்து விரோத அரசாக உள்ளது என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் தமிழிசை தெரிவித்தார்.