மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை!
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக 78 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிலான நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்து தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வைகை விவசாய சங்கத் தலைவர் பாக்கியநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரேண்டம் முறையை கைவிட்டு தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் 100 சதவீதம் முழுமையான காப்பீடு தொகையை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.