குழந்தை பருவ வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ் : இணையத்தில் வைரல் - சிறப்பு தொகுப்பு!
உலக பணக்காரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ் தான் எழுதிய புதிய புத்தகத்தை அறிமுகப்படுத்தும் விதமாக, தனது பள்ளிப்பருவ நிகழ்வை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த வீடியோ வைரலாகியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்...
அமெரிக்க தொழிலதிபரும், உலக பணக்காரர்களுள் ஒருவருமான பில் கேட்ஸ், பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமாவார். இவர் அண்மையில், தனது குழந்தை பருவம் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆரம்ப காலத்தை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
'SOURCE CODE' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த புத்தகத்தில், பில் கேட்ஸ் தனது வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்த உறவுகள் பற்றியும், கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் அனுபவங்கள் பற்றியும் கதையாக விவரித்துள்ளார்.
இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பில் கேட்ஸ் வெளியிட்டார். அதில் மாட்டின் நுரையீரலுடன் காட்சியளித்த பில் கேட்ஸ், தான் 4-ம் வகுப்பு படித்தபோது வகுப்பறைக்கு மாட்டின் நுரையீரலை எடுத்துச் சென்ற நிகழ்வு பற்றி பேசியுள்ளார்.
வாஷிங்டன்னில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்ற பில் கேட்ஸிடம், அவரது வகுப்பாசிரியை கார்ல்சன் சுவாரஸ்யமாக எதையாவது கொண்டு வந்து அதுபற்றி விவரிக்குமாறு தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் கூறியது பற்றி தனது தந்தையிடம் கலந்துரையாடிய பில் கேட்ஸ் அவரது ஆலோசனைப்படி, கசாப்புக்கடையில் இருந்து மாட்டின் நுரையீரலை வாங்கியுள்ளார். பின்னர் அதனை வெள்ளை காகிதத்தில் பொதிந்து வகுப்பறைக்கு எடுத்துச் சென்றார்.
அங்கே பில் கேட்ஸ் தான் கொண்டு வந்த வெள்ளை காகிதத்தை பிரித்தபோது, உள்ளே மாட்டின் நுரையீரல் இருப்பதை கண்ட வகுப்பாசிரியையும், சக மாணவர்களும் அதிர்ச்சி மற்றும் அருவருப்பு போன்ற உணர்வுகளால் வாயடைத்துப் போனார்கள்.
கையுறை எதையும் பயன்படுத்தாமல் வகுப்பறையில் மாட்டு நுரையீரலை பயன்படுத்தி அதன் சுவாச செயல்முறை குறித்து பில் கேட்ஸ் விவரித்தபோது, சக மாணவி ஒருவர் அங்கேயே மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
இதுபற்றி வீடியோவில் குறிப்பிட்ட பில் கேட்ஸ், தனது வகுப்பாசிரியை கார்ல்சன், "செயல்முறை விளக்கம் மிக நன்றாக இருந்தது, ஆனால் முதலில் அதை இங்கிருந்து எடுத்துச் சென்றுவிடு" என அருவருப்பு நிறைந்த தொனியில் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.
'SOURCE CODE' புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள தனது பல குழந்தை பருவ கதைகளில் இதுவும் ஒன்று என வீடியோவில் பில் கேட்ஸ் கூறியுள்ளார். இந்த புத்தகம் வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் பதிவிட்டுள்ள இந்த வீடியோ தற்போது பல லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.