மாணவருக்கு நேர்ந்த துயரம் : ஆசிரியரின் கொடூரம் - சிறப்பு கட்டுரை!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கொடூரமாக தாக்கியதில் 9ம் வகுப்பு மாணவர் செவித்திறன் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களால் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அரங்கேறும் வன்முறைகள் தொடர்பாகவும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
ஒசூரில் பள்ளி மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர், தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர், பள்ளிக்கு வருவதற்கு சற்று தாமதமானதால் மாணவனை வெயிலில் நிற்கவைத்த உடற்கல்வி ஆசிரியர் என தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு எதிராக அரங்கேறும் பெரும்பாலான வன்முறைகளுக்கும் காரணமாக இருப்பது உடற்கல்வி ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள்.
அந்த வரிசையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் HOLY TRINITY என்ற தனியார் CBSE பள்ளியில் நடந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சட்டையை சரியாக டக் இன் செய்யவில்லை என்று கூறி உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் கொடூரமாக கன்னத்தில் தாக்கியதில் அந்த மாணவரின் காது ஜவ்வு கிழியும் அளவிற்கான காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவர் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதோ, பள்ளி நிர்வாகம் மீதோ எந்த நடவடிக்கையும் என எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை மூடி மறைக்க பள்ளி நிர்வாகம் முயல்வதாகவும் கூறப்படுகிறது.
ஒருமுறை ஆசிரியரால் தாக்குதலுக்குள்ளாகும் மாணவருக்கோ, மாணவியருக்கோ அதனுடைய வடுக்கள் என்பது வாழ்நாள் வரை நீடிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. காலம் காலமாக பின்பற்றக்கூடிய இந்த நடைமுறையே இன்றும் தொடர்வது மாணவ, மாணவியர்களை உடல்ரீதியாக மட்டுமில்லாமல் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகிறார் குழந்தைகள் நல பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த ஜென்ஸி...
உடற்கல்வி ஆசிரியரால் தாக்குதலுக்குள்ளாகும் குழந்தைகள் மட்டுமல்லாது அதனை பார்க்கக் கூடிய மற்ற குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஒரு காயத்தை ஏற்படுத்தினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் இளம்சிறார் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் வழிவகுப்பதாக கூறுகிறது குழந்தைகள் நல பாதுகாப்பு சங்கம்.
பள்ளிக் குழந்தைகள் மீதான வன்முறைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதற்கு பள்ளி நிர்வாகத்தின் மோசமான அணுகுமுறையே காரணம் எனக்கூறும் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன், உடல்ரீதியாக, மன ரீதியாத, பாலியல் ரீதியாக, ஆன்லைன் ரீதியாக என எந்த ரீதியாகவும் மாணவ, மாணவியர்களை துன்புறுத்துவதற்கும் கல்வி உரிமைச்சட்டம் முற்றிலுமாக தடை விதித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
தனியார் பள்ளிகளில் குறைவான ஊதியத்தில் பணியமர்த்தப்படும் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒழுங்கை சொல்லித்தர வேண்டிய நிலையில், ஒழுங்கீனமாக செயல்படுவது ஒட்டுமொத்த மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாகவும் கூறுகிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன்.
பாடம் கற்க வரும் குழந்தைகளை உயிர்போகும் அளவிற்கு அடிக்க வேண்டிய கட்டாயம் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு எந்த இடத்தில் வருகிறது என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே வன்முறை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்க வேண்டிய ஆசிரியர்களே அதற்கு முரணாக செயல்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது.