மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களும், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரு.அருண்குமார் IPS அவர்களும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறுவதை பார்க்கும் போது திமுகவை சேர்ந்த பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்ற குற்றவாளிகள் யார் என்பதை மக்களிடம் மறைப்பதற்கான முயற்சி திமுக அரசின் உத்தரவின் பேரில் நடந்து கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.
தமிழக முதல்வரின் நேரடி கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் இயங்குகிற தமிழக காவல்துறை பாதிக்கப்பட்ட மாணவி மீதே குற்றம் இருப்பது போன்ற விஷயங்களை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்ததும், மாணவியின் சுய விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ததும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்ததாகக் தெரியவில்லை.
ஏதோ உள்நோக்கத்தோடு திட்டமிட்டே தமிழக அரசும் காவல்துறையும் இவ்வழக்கில் செயல்படுவது போன்ற சந்தேகத்தை அனைவருக்கும் ஏற்படுத்துகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுகவை சேர்ந்தவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதும், தேசிய மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதும் தான் இவ்விஷயத்தில் இதுவரை நடந்துள்ள ஒரே நம்பிக்கையும், ஆறுதலும் ஆகும்.
தமிழக காவல்துறை இவ்வழக்கை விசாரிப்பதை விட சிபிஐ விசாரிப்பதே பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க ஒரே வழி என்பதே நிதர்சனம்" என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.