மாணவி கொலை வழக்கு! - குற்றவாளிக்கு மரண தண்டனை
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொன்ற வழக்கில், குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி, காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி சத்யபிரியா தாம்பரம் நோக்கி சென்ற ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கு விசாரணை அல்லிக்குளம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 70 சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஸ்ரீதேவி முன்பு சிபிசிஐடி போலீசாரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 24-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மாணவி கொலை வழக்கில் சதீஷ் குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று வழங்கப்படும் என மகளிர் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், சதீஷுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்கியுள்ளார்.