மாநில கட்சியாக மாறும் காங்கிரஸ் : வானதி சீனிவாசன்
இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது.
ஜனவரி 15ம் தேதி தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலக புதிய கட்டிடத்தை திறப்பு விழா நடந்தது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பது தேசத் துரோகம். ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல்" என கூறியிருக்கிறார்.
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத் மாநிலத்தில் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்ட சோமநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது.
அதற்கான முயற்சிகளை செய்தவர் அன்றைய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல். சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட்டதன் மூலம், இந்தியாவின் கவுரவம் மீட்டெடுக்கப்பட்டது.
இந்தியாவின் சுதந்திரம் முழுமை அடைந்தது. அதுபோலதான் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் பெயரில் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தை, 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சட்டப்படி மீட்டு, அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
500 ஆண்டுகாலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அது ராகுல் காந்திக்கு வலிக்கிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டவே முடியாது என நினைத்தவர்களுக்கும், ராமர் கோயில் கட்ட விட மாட்டோம் என வாக்குறுதி அளித்து வாக்குகளை அறுவடை செய்து வந்த சக்திகளுக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடிதான் அயோத்தி ராமர் கோயில் எவ்வளவு எதிர்த்தும் ராமர் கோயில் கட்டப்பட்டு விட்டதே என்ற ஆதங்கத்தில் சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ராகுல் காந்தியும் இணைந்திருக்கிறார்.
மோகன் பாகவத் கூறியதை தேசத் துரோகம் எனக்கூறும் ராகுல் காந்தி, "பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அரசையும் எதிர்க்கிறோம்" என கூறியிருக்கிறார்.
ஒரு அரசியல் கட்சி, இன்னொரு கட்சியை எதிர்ப்பது, விமர்சிப்பது இயல்பானது. அதுதான் அரசியல். ஆனால், இந்திய அரசை எதிர்க்கிறோம் என, 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட குடும்பத்திலிருந்து ஒருவர் கூறுகிறார் என்றால் அதுதான் தேசத் துரோகம்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என ராகுல் காந்தி திரும்ப திரும்ப கூறி வருகிறார். நெருக்கடி நிலையை கொண்டு வந்து அரசியலமைப்பையே முடக்கிய தனது பாட்டி இந்திரா காந்தி பெயரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு, அரசியலமைப்புக்கு ஆபத்து என ராகுல் காந்தி பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தின் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் சொன்னால் முடியாது என்கிறார்கள்.
சட்டப்பேரவை மரபு என்று சொல்லி, அரசியலமைப்பு சட்டத்தை பின்னுக்குத் தள்ளுகிறார்கள். ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஆபத்து என வெற்று கூச்சலிடுகிறார்கள்.
இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது.
அதனால்தான் திமுகவைப்போல மாநில கட்சியாக காங்கிரஸ் சுருங்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ், திமுகவின் இந்த இரட்டை வேடத்தை, கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். தக்க நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.