மார்கழி முதல் நாள்! : கோயிலில் திருப்பாவை பாடல் பாடி வழிபாடு!
மார்கழி மாத பிறப்பையொட்டி, தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நெல்லை அம்பாசமுத்திரத்தில் உள்ள சிவந்தியப்பர் கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறுவர், சிறுமியர் திருப்பாவை பாடல்கள் பாடி வழிபாடு மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவள்ளூரில் உள்ள கல்யாண வரதராஜப் பெருமாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பாவை சேவிப்பு தொடங்கியது. இதில் பெண்கள், ஆண்கள் என திரளானோர் கலந்துகொண்டு திருப்பாவை பாடி பெருமாளை வழிபட்டனர்.
சேலத்தில் உள்ள வெங்கடாசலபதி கோயில், அழகிரிநாதர் சுவாமி கோயில், பாண்டுரங்கநாதர் கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு 1008 நாமாவளிகள் போற்றிப் பாடி திரு விளக்கேற்றினர். அதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.