மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் திமுக, அதிமுக - சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!
திமுக - அதிமுக கட்சியினர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்களே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரையில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி செல்லூர் ராஜு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்றும், நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இரு தரப்பினருக்கும் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், மாறி மாறி இரு கட்சியினரும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சாதனைகளை மட்டும் சொல்லக்கூடிய அளவில் இரு கட்சிகளும் இல்லை என்றும், இப்படி பேசினால் அடுத்த தலைமுறை எப்படி உருப்படும் எனவும் சரமாரி கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சில் எந்த அவதூறும் இல்லை என்று கூறி அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிபதி, ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் ஒரு கட்சி, மற்றொரு கட்சியை குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார்.