'மிஷன் மௌசம்' திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
நமது நாட்டை 'வானிலை சூழலுக்கு தயாராகும் மற்றும் பருவநிலைக்கு உகந்த' நாடாக மாற்றும் நோக்கத்துடன் 'மிஷன் மௌசம்' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அதிநவீன வானிலை கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குதல், உயர் தெளிவுத்திறன் கொண்ட வளிமண்டல கணிப்புகள், அடுத்த தலைமுறை ரேடார்கள், செயற்கைக்கோள்கள், உயர் செயல்திறன் கணினிகள் ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் குறிக்கோள்களை அடைவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வானிலை மற்றும் பருவநிலை செயல்முறைகள் பற்றிய புரிதலை மேம்படுத்துதல், வானிலை மேலாண்மை மற்றும் நீண்ட காலத்திற்கான தலையீட்டை திட்டமிட உதவும் காற்றின் தரம் குறித்த தரவுகளை வழங்குதல் ஆகியவற்றிலும் இது கவனம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை மாற்றங்களுக்கு எதிரான தாங்குதிறன் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்தல் குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தொலைநோக்கு-2047 ஆவணத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார். வானிலை முன்னறிவிப்பு, வானிலை மேலாண்மை, பருவநிலை மாற்றத் தணிப்பு ஆகியவற்றிற்கான திட்டங்கள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.