மீண்டும் சூடுபிடிக்கும் டெல்லி மதுபான கொள்கை விவகாரம்!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகித்தபோது மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக பரிவர்த்தனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது டெல்லி கலால் துறை அமைச்சராக மணீஷ் சிசோடியா பதவி வகித்த நிலையில், இந்த விவகாரத்தில் அவரும், கெஜ்ரிவாலும் கைதாகி சிறையிலடைக்கப்பட்டு கடந்த ஆண்டில் ஜாமீனில் வெளியே வந்தனர்.
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கெஜ்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், அவருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தேர்தல் நெருங்கும் சூழலில் மீண்டும் விசாரணை நடைபெறுவதால் கெஜ்ரிவாலுக்கும், சிசோடியாவுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் பிரியங்கா காக்கர், உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட தலைவர்களை அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது வரலாற்றில் இதுவே முதல்முறை என தெரிவித்தார்.