முடங்கும் அமெரிக்கா : லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் - சிறப்பு கட்டுரை!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழுத்தத்தின் காரணமாக செலவின மசோதாவை நாடாளுமன்றம் நிராகரிக்கும் நிலையில், அனைத்து அரசாங்க சேவைகளும் நிறுத்தப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், 8, 75,000 அமெரிக்க கூட்டாட்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
அமெரிக்காவின் அரசாங்கம் கூட்டாட்சி முறை அரசாங்கமாகும். நிதியாண்டின் தொடக்கமான அக்டோபர் 1ம் தேதிக்கு முன் 438 வெவ்வேறு அரசு நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பொதுவாக அடுத்த நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கப்படும் வரை, அனைத்து அரசு துறைகளிலும் அத்தியாவசியமல்லாத செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்படும். அந்த சமயத்தில் தான் அமெரிக்க அரசாங்கத்தில் மிக பெரிய அளவில் பணி நிறுத்தம் ஏற்படுகிறது.
வழக்கமாக, அரசு துறைகளில் வேலை நிறுத்தங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் SPENDING BILL அல்லது STOP GAP என்று தற்காலிக நிதியுதவி மசோதாவை நிறைவேற்றுவார்கள்.
இந்த ஆண்டுக்கான தற்காலிக மசோதா, சனிக்கிழமையுடன் காலாவதியாகிறது. ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினரும், காலக் கெடுவை வரும் மார்ச் 14ம் தேதி வரை நீட்டிக்கும் தற்காலிக மசோதாவை கொண்டு வந்தனர்.
குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை மற்றும் ஜனநாயக கட்சியினர் அதிகம் உள்ள செனட் சபை இரண்டிலும் இந்த தற்காலிக நிதி உதவி மசோதா நிறைவேறினால் மட்டுமே அமெரிக்க அரசில் பணிநிறுத்தம் ஏற்படாது என்று கூறப்படுகிறது. ஆனாலும், வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை மசோதா நிறைவேறவில்லை.
தேவையில்லாத செலவின கணக்குகள் திணிக்கப்பட்டதாகக் கூறிய குடியரசு கட்சியினர், பிரதிநிதிகள் சபையில் நிதி மசோதாவை நிராகரித்தனர். இந்த அரசாங்க பணி நிறுத்தத்தால், அமெரிக்க அரசு ஸ்தம்பிக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் 875,000 கூட்டாட்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலைய பாதுகாப்பு ,கண்காணிப்பு ஊழியர்கள் பணியில் இல்லாமல் போகலாம்.
அமெரிக்க ராணுவத் துறையிலும் இந்த பணி நிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், பென்டகனில், கிட்டத்தட்ட சுமார் 8,00,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
புதிய சமூகப் பாதுகாப்பு அட்டை பெறுவது தாமதமாகலாம் என்றும், நாடு முழுவதும் சிறு விவசாயிகளுக்கான புதிய கடன்கள் நிறுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பூங்காக்கள், நினைவுச்சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு சுற்றுலா இடங்களும் மூடப்படலாம் என்று கூறப்படுகிறது. பணிநிறுத்தம் பணத்தை மிச்சப்படுத்தும் என்று தோன்றலாம். உண்மையில், பணிநிறுத்தத்தால் அதிகமான பணம் செலவாகும் என்று தரவுகள் காட்டுகின்றன.
இந்த வேலை நிறுத்தம், அமெரிக்க பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதே உண்மை. 2018-2019 ஆண்டின் பணி நிறுத்தத்தால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 11 பில்லியன் டாலரில் இருந்து 3 பில்லியன் டாலராக குறைந்தது.
1977ம் ஆண்டு முதல் 22 முறை இந்த மாதிரியான வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. பெரும்பாலான பணிநிறுத்தங்கள் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். 2018 ஆம் ஆண்டு மட்டும் இந்த பணிநிறுத்தம் தொடர்ந்து 35 நாட்களாக நீடித்தது.
ட்ரம்ப் பதவி ஏற்கும் வரை அரசு நடவடிக்கைகளை எலான் மஸ்க் தாமதப்படுத்துவதாக ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பதற்றமான அரசியல் சூழலில், எலான் மஸ்க் அரசு நிர்வாகத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் ஜோ பைடன், குடியரசுக் கட்சியினர் அரசு நிர்வாகத்தில் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்றும், அரசு பணிநிறுத்தம் அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கின் முன் மொழிவு, அமெரிக்க மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான நடவடிக்கை யாகும் என்று ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ரோ கன்னா தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே,படிப்படியாக அதிகரித்து வரும் அமெரிக்க அரசின் கடன் தற்போது 36 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. ஒரு கட்டத்தில் அரசு கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.