முதலமைச்சரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்!
பாமக நிறுவனர் ராமதாசை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து பேசியதாக கூறி பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக பொறுப்பாளர் அருள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் திரண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதேப்போல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதேப்போன்று கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாமகவினரை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.