முதல்வராகிறார் ஃபட்னாவிஸ்! : மகாராஷ்டிராவின் MODERN அபிமன்யு!
மகாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்துள்ள நிலையில், தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பார்க்கலாம்.
Advertisement
1970-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி நாக்பூர் மாவட்டத்தில் பிறந்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ். அவரது தந்தை கங்காதர் ஃபட்னாவிஸ் மகாராஷ்ட்ர மேலவை உறுப்பினராக இருந்தவர். ஜன சங்கத்தைச் சேர்ந்த அவர், அப்போதைய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திரா காந்தி பெயரில் உள்ள பள்ளியில் படிக்க மாட்டேன் எனக்கூறி வேறு SCHOOL-க்கு மாறினார் சிறுவன் தேவேந்திர ஃபட்னாவிஸ். 1990-ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அவர், அக்கட்சியின் மாணவரணித் தலைவராகவும் செயல்பட்டார்.
சட்டப்படிப்பை முடித்த தேவேந்திர ஃபட்னாவிஸ் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு ராம்நகர் WARD கவுன்சிலராக தேர்வானார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்பூர் மாநகராட்சி மேயர் ஆனார். இதன்மூலம் இந்திய வரலாற்றில் இளம் வயதில் மேயரானவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 1999-ஆம் ஆண்டு நாக்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான தேவேந்திர ஃபட்னாவிஸ் அன்று முதல் இன்று வரை எம்.எல்.ஏ.வாகவே இருக்கிறார்.
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தலில் 122 இடங்களில் பா.ஜ.க. வென்ற நிலையில், சிவசேனா ஆதரவோடு அக்கட்சி ஆட்சி அமைத்தது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதன்முறையாக முதலமைச்சர் ஆனார். அதே ஆண்டில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வென்று 5 ஆண்டு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்தார்.
2019-ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களிலும் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆனால் முதலமைச்சர் பதவியை இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்தது. அதன்காரணமாக கூட்டணி உடைந்தது. எனினும் இரண்டாவது முறையாக முதல்வரான ஃபட்னாவிஸ் 5 நாட்கள் மட்டுமே அப்பதவியில் நீடித்தார். பிறகு எதிர்க்கட்சி தலைவரான அவர், 2022-ஆம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே - பா.ஜ.க. கூட்டணி அரசு அமைந்த போது துணை முதலமைச்சரானார்.
தற்போது நடந்து முடிந்திருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றதில் முக்கியப் பங்காற்றிய இந்த MODERN அபிமன்யுவுக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடந்து முடிந்திருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றதில் முக்கியப் பங்காற்றிய இந்த MODERN அபிமன்யுவுக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.