முதல்வர் மாளிகைக்கு ரூ.33 கோடி செலவிட்ட கெஜ்ரிவால் : அம்பலப்படுத்திய சிஏஜி - சிறப்பு கட்டுரை!
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கண்ணாடி மாளிகையை சீரமைக்க 33 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் பல முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, மக்கள் வரிப்பணத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கென ஒரு "ஷீஷ் மஹால்" கட்டியதாக விமர்சனம் செய்திருந்தார்.
ஷீஷ் மஹாலுக்கு உருது மொழியில், 'கிரிஸ்டல் பேலஸ்' அல்லது கண்ணாடிகளால் ஆன அரண்மனை என்று பொருள்படும். லாகூர் கோட்டையின் வடமேற்கு மூலையில் உள்ள ஷீஷ் மஹால், மொகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது ஆகும்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் பிரத்யேகமாக அலங்காரம் செய்யப்பட்டு பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இது மக்கள் மத்தியில் 'ஷீஷ் மஹால்' என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது.
டெல்லி முதல்வரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தைப் புதுப்பிக்கும் பணியை டெல்லி மாநில அரசின் பொதுப்பணித் துறை செய்து முடித்திருக்கிறது.
சிஏஜி அறிக்கையின்படி, வடக்கு டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தைப் புதுப்பிக்கும் திட்ட மதிப்பீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
முதலில், இந்தப் பணிக்கு 7.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிறகு, 2020 ஆம் ஆண்டில், முதல்வர் இல்ல கட்டுமானப் பணி செலவுகள் 8.62 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு, புதுப்பிக்கும் பணி முடிக்கப்பட்ட போது, மொத்தமாக 33.66 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.
2020ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022 ஜூன் வரையில், ஆரம்ப மதிப்பீடுகளை ஐந்து முறை திருத்திய விதத்தில் முறைகேடு நடந்து இருப்பதை தணிக்கை அறிக்கை கண்டறிந்துள்ளது.
முதல்வர் இல்லம் புனரமைப்பு நடவடிக்கையின் போது, திட்டமிட்ட பகுதி,1397 சதுர மீட்டரில் இருந்து 36 சதவீதம் அதிகரித்து 1905 சதுர மீட்டராக உயர்ந்துள்ளது என்றும் தணிக்கை அறிக்கை கூறியுள்ளது.
மொத்தம், 21,000 சதுர அடியில் கட்டப்பட்ட பகுதியில், எட்டு படுக்கையறைகள், மூன்று வரவேற்பு அறைகள், இரண்டு பெரிய அறைகள், இரண்டு சமையலறைகள், 12 கழிப்பறைகள் மற்றும் ஒரு உணவு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று மாடிகள் கொண்ட டெல்லி முதலமைச்சர் இல்லத்துக்காக வாங்கிய உபகரணங்கள் மற்றும் அதிநவீன வசதிகளையும் தணிக்கை அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
24 சோபா செட்கள், 76 மேஜைகள், 45 நாற்காலிகள், எட்டு படுக்கைகள் மற்றும் ஐந்து சாய்வு சோஃபாக்கள் வைக்கப்பட்டுள்ளன. சமையலறை, கழிப்பறைகள், சலவை பகுதி, உடற்பயிற்சி கூடம் மற்றும் பிற வசதிகள் போன்ற பகுதிகளில் 75 போஸ் சீலிங் ஸ்பீக்கர்கள் மற்றும் 50 உட்புற ஏசிகள் நிறுவப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
ஜன்னல்களுக்கான திரைசீலைகள் ரூ. 96 லட்சம், குளிர்சாதனப் பெட்டி ரூ. 3.2 லட்சம், மைக்ரோவேவ் ஓவன் ரூ. 1.8 லட்சம், ஸ்டீம் ஓவன் ரூ. 6.5 லட்சம், வாஷிங் மெஷின் ரூ. 3.2 லட்சம் என மொத்தம் சமையல் அறை சாதனங்கள் 39 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
உயர் ரக தொலைக்காட்சிகளுக்கு மட்டும் 72.6 லட்சம் ரூபாயும், ஜிம் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுக்கு 18.52 லட்சமும். பட்டு கம்பளத் தரை விரிப்புக்களுக்கு 16.27 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. தரை டைல்ஸ் மார்பிள்ஸ் வகையில் 14 லட்சம் ரூபாயும், மினி பாருக்கு 4.80 லட்சம் ரூபாயும், சுவர்களுக்கான பளிங்கு கற்கள் அமைப்பதற்கான ஒப்பந்தச் செலவு மட்டும் 20 லட்சம் ரூபாயும், சோபாவிற்கு 4 லட்சத்துக்கும் மேல் செலவழிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் கட்டடம் கட்டுவதற்காக ஒதுக்கிய 19.8 கோடி ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள தணிக்கை அறிக்கை, குறிப்பிட்ட அந்த நிதி, தொடர்பில்லாத வேறு இடத்தில் ஏழு பணியாளர் குடியிருப்புகளை கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த தணிக்கை அறிக்கைக்கு, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க டெல்லி மாநில அரசு தயக்கம் காட்டியதாகவும், அது குறித்து சிஏஜி புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்தக்காரர்களால், வழங்கப்பட்ட பொருட்களின் உண்மையான தன்மை மற்றும் பொருட்கள் வாங்கப்பட்ட விலை ஆகியவற்றை சரிபார்க்க முடியவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
பதவியில் இருந்து விலகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, கணக்குத் தணிக்கையாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் கிரிஷ் சந்திர முர்மு தணிக்கை அறிக்கையில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் கெஜ்ரிவால் மீதான மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு ஒருபுறம் இருக்க, ஆம் ஆத்மி ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் மிக பெரிய ஊழலாக 'ஷீஷ் மஹால்' ஊழல், வரவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.