செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முதல் செங்குத்து தூக்குப் பாலம் : நிறைவேறுகிறது கோடான கோடி மக்களின் கனவு!

07:00 PM Apr 07, 2025 IST | Murugesan M

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் அமைக்கப்பட்டுள்ளது. கோடான கோடி ராம பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றியுள்ளார் பிரதமர் மோடி. சிறப்பு மிக்க இப்புதிய ரயில் பாலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Advertisement

1914.... இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம் அது. ராமாயண இதிகாசத்தை தாங்கி நிற்கும் ராமேஸ்வரத்திற்கு, அதற்கு முன்பு வரை மக்கள் செல்ல வேண்டும் எனில் கப்பல் போக்குவரத்துதான் ஒரே வழி.

1876-ல் ஆங்கிலேயர்கள் இந்தியா - இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். பாம்பன் கடலின் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டனர். ஆனால், அத்திட்டம் ஆய்வு நிலையிலேயே கைவிடப்பட்டது. இறுதியில் 1899-ம் ஆண்டு பாம்பன் கடலில், கீழே கப்பல் - மேலே ரயில் செல்லும் வகையில் டபுள் லீப் கேண்ட் லிவர் பிரிட்ஜ் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

Advertisement

1902 முதல் பாலம் கட்டுவதற்காக இங்கிலாந்தில் இருந்து கப்பல்கள் மூலம் அனைத்து பொருட்களும் இந்தியா கொண்டு வரப்பட்டன. பல தடைகளைக் கடந்து 1913-ல் பாம்பன் கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தூண்களுடன் பாம்பன் பாலம் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 1914 பிப்ரவரி 24 முதல் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பெருநிலப் பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாலமாக உதயமானது பாம்பன் ரயில் பாலம். பாலத்தின் நடுவே உள்ள கத்தரி வடிவிலான தூக்குப்பாலம் வழியாகக் கப்பல்கள் சென்று வருவதைக் காண்பதே ஒரு கண்கொள்ளாக் காட்சிதான்.

நூற்றாண்டுகளைக் கடந்த பின்னர் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் வலுக் குறைந்தது. அடிக்கடி தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதுடன் விரிசலும் விழுந்தது. இதனால் பழைய ரயில் பாலத்திற்கு அருகில் புதிய பாலத்தைக் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து 2019 பிப்ரவரி ஒன்றாம் தேதி புதிய ரயில் பாலத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். 11-ம் தேதியிலிருந்து புதிய ரயில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2021 செப்டம்பர் 31-ம் தேதிக்குள் ரயில்வே பாலத்தின் பணிகளை முடிக்க ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்தது. ஆனால் கடல் சீற்றம், புயல் போன்ற காரணங்களால் திட்டமிட்ட காலத்திற்குள் பணியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே 2022 டிசம்பர் 22-ம் தேதி இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில், பாம்பன் பாலத்தைக் கடந்தபோது அதிர்வுகள் அதிகம் இருந்ததால் அபாய ஒலி எழுந்தது. இதனால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாம்பன் பாலம் வழியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையம் வரையே இயக்கப்பட்டன.

தற்போது பாம்பன் புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன. தொடக்கத்தில் 250 கோடி ரூபாய் நிதியில் ரயில் பாலம் கட்ட  திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வானிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் செலவு 550 கோடி ரூபாயைக் கடந்தது. இந்தப் பாலம், 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளத்தையும் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தையும், 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டுள்ளது.

புதிய ரயில் பாலத்தின் பெரும்சிறப்பே நடுவில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலம்தான். இது இந்தியாவிலேயே முதல் செங்குத்து தூக்குப் பாலம் ஆகும். விமானத் தொழில் நுட்பத்திற்குப் பயன்படக்கூடிய அலுமினிய உலோகக் கலவையால் இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 27 மீட்டர் உயரம், 77 மீட்டர் நீளத்தில் சுமார் 100 டன் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை மேலே உயர்த்த
ஹைட்ராலிக் லிஃட் பொருத்தப்பட்டுள்ளது.

100 ஆண்டுகள் ஆனாலும் அசைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் வழியாக மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் ரயில் நிலையம் வரை 70 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கலாம்.

இடையில் உள்ள செங்குத்து தூக்குப்பாலத்தில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கலாம். அதேநேரம் பாம்பன் கடல் பகுதியில் 58 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ராமேஸ்வரம் மக்களுக்கும், கோடான கோடி ராம பக்தர்களுக்கும் பாம்பன் ரயில் பாலம் வழியாக தற்போது புதிய விடியல் பிறந்துள்ளது.

Advertisement
Tags :
The first vertical suspension bridge: The dream of millions of people is coming true!FEATUREDMAINபாம்பன் புதிய ரயில் பாலம்
Advertisement
Next Article