முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை பத்து முப்பது மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Advertisement
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சப்பிரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், முதல் தகவல் அறிக்கை கசியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது முதல் தகவல் அறிக்கை கசியவில்லை என்றால் ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கையை கசியவிடுவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என தெரிவித்தனர்.
மேலும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தமிழக காவல்துறையின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என தெரிவித்தனர்.
மாணவியும் அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், தனி நபரை காப்பாற்ற அரசு செயல்படக்கூடாது என அறிவுறுத்தினர்.
அதேபோல், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர் என்ன செய்கின்றனர் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழகம் தங்கள் மாணவர்களுக்கு முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டினர்.
வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களையும் தமிழக அரசும், காவல்துறையும் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.,
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும், தைரியமாக புகாரளிக்க முன்வந்த மாணவிக்கு நீதிபதிகள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.