முதுமையில் இளமை எப்படி? - 78 வயதில் 20 வயதை குறைத்த மருத்துவர்- சிறப்பு தொகுப்பு !
முறையான உடற்பயிற்சி மற்றும் சரியான வாழ்க்கை முறையால், 78 வயதான ( Dr Michael Roizen)டாக்டர் மைக்கேல் ரோய்சன், தனது வயதை 20 ஆண்டுகள் குறைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியம் ? வயதானாலும், இளமையாக என்ன வழிகள் ? டாக்டர் மைக்கேல் ரோய்சன் சொல்லும் ஆலோசனை என்னென்ன ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
முதுமை நெருங்கும்போது, இன்னும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் வருவதுண்டு. ஆனால், அதற்கான எந்த முயற்சியும் எடுக்காதபோது, ஆசைகள் நிராசைகளாகி விடும். எந்த மாதிரியான நடவடிக்கைகள் உடலின் இளமையை மீட்டுக் கொடுக்கும் என்ற கேள்வி வருகிறது அல்லவா ? அதற்கு வழி காட்டுகிறார் அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் மைக்கேல் ரோய்சன்.
நீண்ட ஆயுளைப் பற்றிய பல நூல்களை எழுதியுள்ள 78 வயதான டாக்டர் மைக்கேல் ரோய்சன், (Cleveland) க்ளீவ்லேண்ட் கிளினிக்கின் தலைமை அதிகாரியாக உள்ளார். தனது உயிரியல் வயதை 20 ஆண்டுகள் குறைந்துள்ளதாக கூறும் டாக்டர் மைக்கேல் ரோய்சன், அதனால், உயிரியல் வயது சுமார் 57 என்று பெருமையாக தெரிவித்துள்ளார்.
உலக அளவில், ஒருவரின் biological age எனப்படும் உயிரியல் வயதை கண்டுபிடிக்கும் முறைகளில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வாழ, தனது உணவுக் கொள்கைகளைப் பின்பற்றுமாறு டாக்டர் மைக்கேல் ரோய்சன், வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்று கூறும் டாக்டர் மைக்கேல் ரோய்சன், தனது அலுவலகத்துக்கு வெகு தொலைவில் தன் வாகனத்தை நிறுத்தி விட்டு, நடந்தே அலுவலகம் செல்வதாக தெரிவித்துள்ளார்.
வாரத்தில் ஐந்து நாட்கள் வெறும் 30 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி, இதயநோய், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. மனநலத்தை மேம்படுத்துகிறது. மேலும் ஆயுட்காலத்தை ஆச்சரியப்பட வைக்கும் அளவில் அதிகரிக்கிறது என்று டாக்டர் மைக்கேல் ரோய்சன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
avocado, சால்மன் மீன், மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கும் டாக்டர் மைக்கேல் ரோய்சன், இந்த உணவுகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறுகிறார்.
அடுத்த படியாக, ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை அதிகரிப்பதில், நல்ல நட்பு மற்றும் குடும்ப உறவுகள் உள்ளிட்ட சமூக தொடர்புகள், முக்கிய பங்காற்றுகின்றன என்றும் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.
அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று உறுதிபட சொல்லும் இவர், “Double Decision” மற்றும் “Freeze Frame ஆகிய அறிவுசார்ந்த விளையாட்டுக்கள், மூளையின் வேகத்தை மேம்படுத்தும் என்றும், அதனால், dementia டிமென்ஷியா நோய் வராமல் தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
( flu ) ஃப்ளூ தடுப்பூசிகள், காய்ச்சலைத் தடுப்பதோடு, மூளை வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் dementia டிமென்ஷியா வராமல் தடுக்கிறது என்று டாக்டர் மைக்கேல் ரோய்சன் பரிந்துரைத்துள்ளார்.
இளமையுடன் கூடிய நீண்ட ஆயுளுக்கு டாக்டர் மைக்கேல் ரோய்சன் சொல்லும் ஆலோசனைகள் எளிமையானவை என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.