முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு - முக்கிய நபரான சுஜீத் சுஷில் சிங் கைது!
மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மும்பையைச் சேர்ந்த சுஜீத் சுஷில் சிங்கைக் கைது செய்ததாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மகாராஷ்டிராவில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பாபா சித்திக். அம்மாநில முன்னாள் அமைச்சரான இவர், மும்பை நிர்மல் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் அமர்ந்தார்.
அப்போது அவரது காரை சுற்றி பட்டாசுகளை வெடிக்க செய்த மர்மநபர்கள், காரில் இருந்த சித்திக் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். உடலில் குண்டுகள் பாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பாபா சித்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுசெய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் தேடப்பட்டு வந்த மும்பையை சேர்ந்த சுஜீத் சுஷில் சிங்கை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இந்நடவடிக்கையில் மும்பை காவல் துறையுடன் இணைந்து, கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பஞ்சாப் டிஜிபி ட்வீட் செய்துள்ளார். சிறையில் உள்ள லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலே கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.