முருக பக்தர்களை அவமதித்த அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்!
முருக பக்தர்களை அவமதித்த அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
"திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம் அங்கு நான்கு மணி நேரமாக தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் அவரிடம் முறையிட்டனர். பக்தர்களுக்கு வசதி செய்யாமல் வரிசையில் நிற்க வைக்கப்பட்டது குறித்து வருத்தப்பட்ட பக்தர்களையும், வயதானவர்களையும் அமைச்சர் ஒருமையில் பேசியதும், திருப்பதியில் கேள்வி கேட்காமல் நிற்பீங்க என கூறியதும் கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக நடக்கிறது. மக்களை மதிப்பதில்லை. கேள்வி கேட்டால் மிரட்டுவது, வழக்கு போடுவது, சிறையில் அடைப்பது என்ற அகந்தையோடு செயல்படுகிறது. அதுவும் பொது இடத்தில் மரியாதை குறைவாக ஒருமையில் பேசுவது அநாகரிகம். இது தொடர்கிறது.
திருப்பதியை பற்றி பேசுவதற்கு முன் அமைச்சர் சேகர் பாபு யோசித்து இருக்க வேண்டும். அங்கு பக்தர்களுக்கு எத்தகைய வசதிகளை தேவஸ்தானம் செய்து தருகிறது? பல லட்சம் பக்தர்கள் வருகின்ற ஐயப்பன் கோவிலில் எத்தகைய ஏற்பாடு இருக்கிறது. இதுபோல தமிழகத்தில் எந்த கோவிலிலாவது இருக்கிறதா? தரிசன கட்டணம் என்ற பெயரில் பக்தர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இறைவன் முன் பொருளாதார தீண்டாமையை இந்த அரசு செயல்படுத்துகிறது. கோவிலில் தரிசன கட்டணம் கொள்ளை நடக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே காரணம்.
இந்நிலையில் அமைச்சர் முதல், கோவிலில் உள்ள காவலாளி வரை பக்தர்களை தாக்கப்படுவதையும் அவமதிப்பதையும் பார்க்கிறோம். திருச்செந்தூர் கோவிலில் கடல் அரிப்பு ஏற்படுவது குறித்து இந்து முன்னணி பிரார்த்தனை ஆர்ப்பாட்டம் நடந்ததாலே அமைச்சர் சேகர் பாபு கோவிலை பார்வையிட வந்தார். பல கோடி வருமானம் வருகின்ற கோவிலை பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் திமுக ஆட்சியில் இல்லை. அப்படியே வந்த அமைச்சர் கடல் அரிப்பை தடுக்க நிபுணர்களை அழைத்து வந்து அதற்கு தக்க நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும்.
ஆனால் உலக முருக பக்தர்கள் மாநாடு என்று போலி நாடகம் நடத்தி கோவில் நிதியை கரைத்தனர். அதேசமயம் முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என ஆக்கிரமிக்க திமுக எம்எல்ஏ அரசிடம் கோரிக்கை வைத்ததை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வேடிக்கை பார்க்கிறார்.
முருக பக்தர்கள் அள்ளி கொடுக்கும் உண்டியல் காணிக்கை ஆட்சியாளர்களுக்கு இனிக்கிறது. பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு வேண்டிய எந்த ஏற்பாடும் செய்யாமல் விபத்தில் சிக்கி உயிரிழப்பதை இந்த அரசு கண்டுகொள்வதில்லை. அதுவே வேற்று மதத்தினர் வெளிநாடு யாத்திரை செல்ல கோடிக்கணக்கில் நிதியை அள்ளி தந்து ஓடோடி உதவுகிறது.
விழாக்காலங்களில் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் கூட செய்யாத நகராட்சிகள் இந்துக்களிடம் ஜீசியா வரியை போல இந்துவாக இருப்பதற்காக நுழைவு கட்டணம் வசூலிக்கிறது. இத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொண்டு இந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டிய நிலை இந்துக்களுக்கு உள்ளது. அதைவிட கொடுமை விரதம் இருந்து பக்தியோடு தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களை அமைச்சர் ஒருமையில் பேசி அவமதித்தது.
பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர அரசு கடமைபட்டது என்ற உணர்வு அமைச்சருக்கு இருக்க வேண்டும். பொது இடத்தில் வயதானவர்களை மதிக்கும் நாகரிகம் வேண்டும். அமைச்சரே பக்தர்களை அவமதித்தால் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. அதனால் தான் ஐயப்பன் மலைக்கு செல்லும் பக்தர்கள் அதிகமாக கோவிலுக்கு வரும் காலங்களில் கைகலப்பு, பிடித்து தள்ளுதல் போன்ற அநாகரிக செயல்கள் நடப்பதை பார்க்கின்றோம்.
எனவே திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்யவும், கடல் அரிப்பில் இருந்து கோவிலை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருப்பரங்குன்றம் முருகன் மலையின் புனிதத்தை காக்க உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். பக்தர்களை அவமதித்த அமைச்சர் மற்றும் கனிமொழி எம்பி பகிரங்க மன்னிப்பு கேட்டு, இனி இதுபோல் நடக்காமல் இருக்க உறுதி கூற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.