முறையான நீர் மேலாண்மை உள்ள நாடுகள் மட்டுமே முன்னேற முடியும் - பிரதமர் மோடி கருத்து!
இந்தியாவில் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டியதற்காக அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் பெருமைப்படுத்தியது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி மத்தியப்பிரதேசம் மாநிலம் கஜுராஹோ பகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். வாஜ்பாய் நினைவாக தபால்தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்ட
அவர், Ken-Betwa நிதி இணைப்பு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து விழாவில் உரையாற்றிய பிரதமர், தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க காங்கிரஸ் நிரந்தர தீர்வை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
21-ம் நூற்றாண்டில் தண்ணீர் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது எனவும் போதுமான நீர் மற்றும் முறையான நீர்மேலாண்மை உள்ள நாடு மட்டுமே முன்னேற முடியும் எனவும் கூறினார்.
குஜராத்தில் பெரும்பாலான பகுதிகள் ஆண்டு முழுவதும் வறட்சியில் இருந்தன எனவும் நர்மதா நதியின் ஆசீர்வாதம், குஜராத்தின் தலைவிதியை மாற்றியதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வைதான் இந்தியாவின் நீர்வளம் மற்றும் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டியது எனவும் இன்றும் அவரது முயற்சிகளுக்கு மத்திய நீர் ஆணையம் கடமைப்பட்டு உள்ளதாகவும் கூறினார். ஆனால் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்காக அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் பெருமைப்படுத்தவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.