முல்லைப் பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசு - இபிஎஸ் கண்டனம்!
முல்லைப் பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கும், வாய்மூடி மவுனியாக இருக்கும் திமுக அரசுக்கும் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், தென்மாவட்ட மக்களின் ஜீவாதார நதியாக உள்ள முல்லைப் பெரியாறு அணையில், அதிமுக ஆட்சியின்போது, பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், திமுக ஆட்சியில் பராமரிப்பு பணிக்காக லாரியில் கொண்டு சென்ற கட்டுமானப் பொருட்களை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
முறையாக அனுமதி பெறாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கும், தடுத்து நிறுத்திய கேரள அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாகவும், எனவே, பராமரிப்பு பணிகளை உடனே மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.