மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து தேசிய சுகாதார ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
Advertisement
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து விதமான சிகிச்சைகளையும் இலவசமாக பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமலில் இருந்துவரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு பொருளாதார அளவுகோல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் இருந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பொருளாதார அளவுகோல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின்கீழ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய சுகாதார ஆணையம் விளக்கியுள்ளது.
அதன்படி, திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலமாகவோ அல்லது ஆயுஷ்மான் எனப்படும் செயலி மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பிக்கும் நபர் 70 வயதுக்கு மேற்பட்டவராகவும், மத்திய அரசின் சுகாதார திட்டம் எதிலும் பயன்பெறாதவராகவும் இருந்தால் மட்டுமே மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெற முடியும் எனவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு அட்டைக்கு விண்ணப்பிப்பதில் இருந்த நடைமுறை சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 2 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.