மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல் உருவாகி வருகிறது - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!
ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக, 3-ம் உலகப்போர் அச்சுறுத்தல் உருவாகி வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் மஹாகோஷல் பகுதியின் சங்கப் பெண் தலைவி டாக்டர் ஊர்மிளாவின் நினைவாக ஜபல்பூரில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மூன்றாம் உலகப் போரின் நிழல் உருவாகி வருவதை நாம் அனைவரும் உணர்வதாக தெரிவித்தார்.
அறிவியல் முன்னேறியுள்ளது, ஆனால் அதன் பலன்கள் ஏழைகளை சென்றடையவில்லை. ஆனால் உலகை அழிக்கும் ஆயுதங்கள் எல்லா இடங்களிலும் வந்து விட்டதாக கூறினார்.
சில நோய்களுக்கான மருந்துகள் கிராமப்புறங்களில் கிடைக்காமல் போகலாம், ஆனால் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் (தேஷி கட்டா) கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
மனித குலத்திற்கு சேவை செய்வதே சனாதன தர்மம் என்று தெரிவித்த அவர், உலகிற்கு வழி காட்டும் ஆற்றல் இந்துத்துவாவுக்கு உள்ளதாகவும் கூறினார். இந்து என்ற வார்த்தை இந்திய வேதங்களில் காணப்படுவதற்கு முன்பே நீண்ட காலமாக இருந்ததாகக் கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர், குருநானக் தேவ் அவர்களால் பொதுச் சொற்பொழிவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.