மூன்றில் ஒரு இந்தியருக்கு Vitamin- D குறைபாடு - சிறப்பு தொகுப்பு!
வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டு முழுவதும், போதுமான சூரிய ஒளி கிடைக்கிறது. இருந்தபோதும் பல இந்தியர்கள் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
Advertisement
வைட்டமின் டி, உடலில் Calcium மற்றும் phosphate அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது உடலில் உள்ள எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை வலிமையாக்க உதவுகிறது.
குழந்தைகளைப் பாதிக்கும் ( Rickets ) ரிக்கெட்ஸ் எலும்பு குறைபாடு மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் ( Osteomalacia ) ஒஸ்டியோமலாசியா போன்ற எலும்பு குறைபாடுகளைத் தடுக்க (Vitamin D), வைட்டமின் டி உதவுகிறது. இந்த வைட்டமின் டி குறைபாட்டால் பல்வேறு வகையான உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
வைட்டமின் டி குறைபாடு என்பது நோயல்ல. அது ஒரு குறைபாடுதான். ஆனாலும், இந்த குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும். அதன் காரணமாக அனைத்து வகையான தொற்று நோய்களும் மிக எளிதாகத் தொற்றிக் கொள்ளும். எலும்புகளின் உறுதித்தன்மையை வைட்டமின் டி குறைபாடு வெகுவாக குறைக்கும் என்பதால் எலும்பு முறிவுகள் ஏற்படும்.
இதனால்,முடக்கு வாதம் மற்றும் நீரழிவு நோய் வருவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம். மேலும், தூக்கமின்மை, மன அழுத்தம், மகிழ்ச்சியின்மை, உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tata 1mg Labs இன் அறிக்கை, இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 76 சதவீதம் பேர் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது . இந்தியாவில் உள்ள 27 முக்கிய நகரங்களில் உள்ள சுமார் 2.2 லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆண்களில் 79 சதவீத பேருக்கும் பெண்களில் 75 சதவீத பேருக்கும் வைட்டமின் D அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், 25 வயதுக்குட்பட்டவர்கள் 84 சதவீதமும், 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 81 சதவீதமும் இந்த குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. கைக்குழந்தைகள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள், இளைஞர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மாறும் உணவுப் பழக்கம் மற்றும் சூரிய ஒளி படாத வகையில் வாழும் வாழ்க்கை முறை ஆகியவை வைட்டமின் டி குறைபாடுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் சூரிய ஒளி தோலில் படுவதைத் தடுக்கும் வகையில், உடலின் பெரும்பகுதியை மறைக்கும் ஆடைகளை அணியும் கலாச்சாரமும் வைட்டமின் டி குறைபாடுகளுக்குக் காரணமாகிறது. .
அடர்ந்த புகை மற்றும் தூசிகளால் உண்டாகும் காற்று மாசுபாடு, நேரடியாக சூரிய ஒளியில் இருந்து வரும் வைட்டமின் டி உற்பத்திக்கு தேவையான UVB கதிர்களைத் தடுக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய, அதிக சூரிய ஒளி, சிறந்த உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வெயில் படும் இடங்களில் சிறிது நேரமாவது இருப்பது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை வெயிலில் இருப்பதன் மூலம், வைட்டமின் டி சத்தைப் பெறலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும்,வைட்டமின் டி குறைபாட்டைத் தடுக்க முட்டையின் மஞ்சள் கரு, மீன் எண்ணெய், சிவப்பு இறைச்சி மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.