மெகா திட்டங்கள் ரெடி : சுற்றுலாவில் மாலத்தீவை மிஞ்சப்போகும் லட்சத்தீவு - சிறப்பு கட்டுரை!
லட்சத்தீவு அழகான கடற்கரை மற்றும் தீவுகளை கொண்டிருந்தாலும், அங்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் உள்நாட்டு சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும், தீவுக்கூட்டத்தின் இணைப்பை மேம்படுத்தவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
பவளத் தீவுகள் மற்றும் திட்டுகள் கொண்ட தீவுக்கூட்டமே லட்சத்தீவு. இது இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமாகும். 36 தீவுகளை கொண்ட லட்சத் தீவுகளின் மொத்த நிலப்பரப்பு சுமார் 32 சதுர கிலோமீட்டர் ஆகும். சுற்றிலும் சுமார் 4,200 சதுர கிலோமீட்டர் கடற்பகுதியால் சூழப்பட்டுள்ளது.
லட்சத்தீவு தீவுகளில் 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். 17 தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு தீவுகள் மற்றும் ஐந்து நீரில் மூழ்கிய பாறைகளாக உள்ளன.
2020 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், அடுத்த 1000 நாட்களில் லட்சத் தீவுக்கு அதிவேக இணைய தள வசதிகள் வழங்கப் படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். அதன் படியே, லட்சத் தீவில் வேகமான இணைய தள வளர்ச்சி உட்பட தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் 1150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைப் பிரதமர் மோடி கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
கொச்சி- லட்சத் தீவு இடையே கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள் இணைப்புத் திட்டமதையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் மூலம் லட்சத் தீவின் இணைய தள வேகம் 1 ஜிபிபிஎஸ்ஸில் இருந்து 200 ஜிபிபிஎஸ்ஸாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இணைய சேவைகள், மின்னணு நிர்வாகம், இணைய வழி மருத்துவச் சேவைகள், இணைய வழி வங்கி சேவைகள் உள்ளிட்டவை மேம்படுத்தப் பட்டிருக்கிறது.
மேலும், கட்மாட் பகுதியில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் லிட்டர் உற்பத்தித் திறனுடன் கூடிய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கவரட்டியில், முதல் சூரிய மின்சத்தி திட்டம் ஆகியவற்றைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, அகத்தி, மினிகாய் உள்ளிட்ட 5 தீவுகளில் மாதிரி அங்கன் வாடிகள் மையங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
லட்சத்தீவின் அழகைக் கண்டால், உலகின் மற்ற இடங்கள் சாதாரணமானதாகத் தோன்றும் என்று கூறிய பிரதமர் மோடி, வெளிநாடுகளில் உள்ள தீவு நாடுகளுக்கு செல்ல விரும்புவோர் லட்சத்தீவுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் விளைவாக மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை 5 மடங்காக உயர்ந்தது.
லட்சத் தீவுகளின் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்த கவனம் செலுத்தப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி லட்சத்தீவில் 3,600 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆண்ட்ரோத் , கல்பேனி, கத்மத் தீவுகளில் துறைமுக வசதிகள் என்று 13 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்த திட்டங்களுக்கான நிதி, துறைமுகம் மற்றும் நீர்வழி போக்குவரத்து மேம்பாட்டுக்கான சாகர்மாலா திட்டத்தின் கீழ் வழங்கப் பட்டுள்ளன.
இந்த திட்டங்களில், கவரட்டி, அகத்தி மற்றும் மினிகாய் தீவுகளில் பெரிய கப்பல்களை நிறுத்துவதும், கல்பேனி, கத்மத் மற்றும் ஆண்ட்ரோத் தீவுகளில் நவீன வசதிகளுடன் கூடிய பயணிகள் வசதி மையங்களை ஏற்படுத்துவதும், கல்பேனி மற்றும் கத்மத்தில் கப்பல்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் திறந்தவெளி ஜெட்டிகளை உருவாக்குவதும் அடங்கும்.
303 கோடி ரூபாய் மதிப்பில் கத்மத் தீவில் ஜெட்டிகள் மற்றும் நிலப்பரப்பு வசதிகளை உள்ளடக்கிய முதல் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்கான ஏலம் கடந்த புதன்கிழமை தொடங்கப் பட்டது.
லட்சத்தீவுகள் முழுவதும் இயங்கும் அனைத்து பயணிகள் கப்பல்களுக்கும் இடமளிக்கும் திறன் கொண்ட மல்டிமாடல் ஜெட்டியை உருவாக்குதல், அதன் மூலம் இணைப்பை மேம்படுத்துதல், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்தல் மற்றும் சுற்றுலா அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. லட்சத்தீவில் விரிவான துறைமுகம் மற்றும் கப்பல் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது அரசின் நோக்கமாகும்.
முதல் திட்டமாக கொச்சியில் இருந்து சுமார் 407 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கத்மத் தீவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் ஜெட்டிகள் அமைக்கப் பட உள்ளன. அதிகமான மக்கள் வசிக்கும் தீவான கத்மத், லட்சத்தீவுகளின் மையத்தில் 3.34 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது.
360 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஜெட்டியானது உல்லாச கப்பல்களை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 303 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு கூடம், வருகை மற்றும் புறப்பாடு முனையமாக தனி போக்குவரத்து மையமாக இந்த திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு இருபுறமும் நவீன வசதிகளுடன் கூடிய பயணிகள் வசதி மையம், கல்பேனி, கத்மத் மற்றும் ஆந்த்ரோத் ஆகிய இடங்களில் கிடங்கு போன்ற நிலப்பரப்பு வசதிகளை நிர்மாணிப்பதும் இந்த திட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளது. மேலும், பெரிய சரக்கு கப்பல்களுக்கு இடமளிக்கும் வகையில் கவரட்டி, அகத்தி மற்றும் மினிகாய் தீவுகளில் கிழக்கு ஜெட்டிகளை விரிவுபடுத்தவும் வகை செய்யப் பட்டுள்ளது.
ஆண்ட்ரோத் பிரேக் வாட்டரை புதுப்பித்தல், ஆண்ட்ரோத்தில் மல்டிமாடல் ஜெட்டி மற்றும் கடற்படை ஜெட்டி மேம்பாடு மற்றும் கல்பேனி, கத்மத் மற்றும் ஆண்ட்ரோத்தில் ஸ்லிப்வே மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளன.
கொச்சி துறைமுக ஆணையம், திட்ட மேலாண்மை ஆலோசகராக செயல்படும் இந்த திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கையை சென்னையில் உள்ள அசிஸ்டம் இந்தியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இஸ்லாமியர் அதிகமாக வாழும் லட்சத் தீவுகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது மற்றும் மக்களுக்குச் செழிப்பான வாழ்க்கையை உறுதி செய்வதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது