மெல்போர்ன் டெஸ்ட் : ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை!
மெல்போர்ன் நடைபெற்று வரும் டெஸ்ட் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது.
Advertisement
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனர்கள் தடுமாறிய நிலையில், SAM KONSTAS என்ற 19 வயது இளைஞரை ஆஸ்திரேலிய அணி களமிறக்கியது.
பும்ராவை எதிர்கொள்ளும் கடினமான சூழலில் களமிறங்கிய அந்த இளைஞர், நான்கு பக்கமும் பந்துகளை விரட்டி, இந்திய பந்துவீச்சாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனிடையே ஆட்டத்தின் 10வது ஓவர் முடிந்தவுடன் பந்தை எடுத்துக்கொண்டு வேகமாக நகர்ந்த விராட் கோலி, எதிரே வந்த SAM KONSTAS மீது மோதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து சக பேட்ஸ்மேனான கவாஜா, விராட் கோலியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவத்திற்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்த நிலையில், விராட் கோலி இவ்வாறு செய்திருக்க கூடாது என முன்னாள் இந்திய வீரர்களே அவரை கண்டித்தனர். இதன் எதிர்விளைவாக விராட் கோலிக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதித்த ஐசிசி, அதோடு விட்டுவிடாமல் பேட்ஸ்மேன்களுக்கான புள்ளி பட்டியிலில் விராட் கோலிக்கு ஒரு புள்ளியை ஐசிசி குறைத்தது.
இதன் தொடர்ச்சியாக நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி 140 ரன்களை குவித்ததால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களை சேர்த்தது. இதன்பின்னர் களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் நிலைத்து நின்று 88 ரன்கள் சேர்த்தார்.
ஒரு கட்டத்தில் 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும், நிதிஷ் குமார் ரெட்டியும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். தொடர்ந்து இருவரும் சேர்ந்து 128 ரன்கள் PARTNERSHIP அமைத்த நேரத்தில் நிதிஷ் குமார் ரெட்டி சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் முதல் இன்னிங்சில் 369 ரன்கள் அடித்து இந்திய அணி FOLLOW ON-ஐ தவிர்த்த நிலையில், 2வது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தனர். ஒருகட்டத்தில் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 156 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.
தொடர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் NATHAN LYON மற்றும் SCOTT BOLAND ஆகியோர் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடி வருகின்றனர். இதன்மூலம் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது.இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.