மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.