ராசாவே உன்ன காணாத நெஞ்சு... காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? - சிறப்பு கட்டுரை!
பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் காந்தக்குரலுக்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை என்றே கூறலாம். தமித் திரையிசை ரசிகர்களை தனது குரலால் ஈர்த்த பாடகர் ஜெயச்சந்திரன் குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்ப்போம்.
கண்ணுக்கொரு வண்ணக்கிளி... காதுக்கொரு கானக்குயில்... நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா... என்பதைப் போல் மென்குரலுக்கொரு ஜெயச்சந்திரன் என்று சொன்னால் அது மிகையல்ல.
1944-ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள ரவிபுரத்தில் பிறந்தவர் ஜெயச்சதிரன். தந்தை இசைத்துறையில் இருந்ததால் இயல்பாகவே ஜெயச்சந்திரனுக்கு அதில் ஆர்வம் இருந்தது.
சிறுவயதிலேயே மிருதங்கம் வாசிக்கத் தொடங்கிய அவர் அதற்காக மாநில அளவில் பரிசுகளை பெற்றுள்ளார். 1958-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் சிறந்த பாடகருக்கான விருதை K.J.யேசுதாஸ் வாங்கிய போது, மிருதங்க வாசிப்புக்கான விருதை பெற்றவர் ஜெயச்சந்திரன். 1960-களில் மலையாளத் திரைப்படங்களில் பாடத்தொடங்கிய அவரை தமிழுக்கு அழைத்து வந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
எம்.எஸ்.விஸ்வநாதனைத் தொடர்ந்து இளையராஜாவிடம் பாடத்தொடங்கினார் ஜெயச்சந்திரன். இசைஞானியின் இசையில் காலத்தால் அழியாத பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மெலடியும் ஜெயச்சந்திரனின் மென்குரலும் சேர்ந்தபோது திரையில் மேஜிக் நிகழ்ந்தது. தேவா, வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ் என அனைத்து தலைமுறை இசையமைப்பாளர்களிடமும் பாடியவர் ஜெயச்சந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
தேசிய விருது, மாநில அரசுகளின் விருதுகள் மற்றும் கலைமாமணி பட்டத்தைப் பெற்றவர் ஜெயச்சந்திரன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கேரள மாநிலம் திருச்சூரில் சிகிச்சை பலனின்றி 80-ஆவது வயதில் காலமானார். காதல், ஏக்கம், பிரிவு, சோகம், பக்தி என எந்த உணர்வாக இருந்தாலும் அதைச் சிறப்பாக வெளிப்படுத்தும் சில பாடகர்களில் ஜெயச்சந்திரனும் ஒருவர். இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் தமது மென்குரல் மூலம் மக்களுக்கு இளைப்பாறுதலை வழங்கிக் கொண்டே இருப்பார் ஜெயச்சந்திரன்.