ராஜினாமா செய்வதாக காவல் ஆய்வாளர் உள்துறை செயலருக்கு கடிதம்!
தனது அதிகாரத்தில் தலையிடுவதால் பணி செய்ய விருப்பம் இல்லை என கூறி ராஜினாமா செய்வதாக காவல் ஆய்வாளர், உள்துறை செயலருக்கு கடிதம் எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமாநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல்நிலையத்தில் சரவணன் என்பவர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர், தனது அதிகாரத்தில் தலையிடுவதால் பணி செய்ய விருப்பமில்லை என கூறி ராஜினாமா செய்வதாக உள்துறை செயலருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், திருவாடானை டிஎஸ்பி முகாம் அலுவலக எழுத்தர் தமது பணியில் குறுக்கிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனக்கு கீழ் பணிபுரியும் காவலர்களுக்கு, தன்னிடம் கேட்காமல் வேலைகளை கொடுத்து நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் தன்னால் பணி செய்ய முடியவில்லை என கூறியுள்ள அவர், ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.