ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் கோப்புகளை இரண்டு வாரங்களில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆளுநரிடம் வழங்கவும், அதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி , மூன்று கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது விசாரணைக்கு வந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைகள் தொடர்பான கோப்புகளுக்கு மொழி மாற்றம் தேவைப்படுவதால் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என ஆளுநர் தரப்பு கூறியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி வழக்கு விவகாரத்தில் உள்ள கோப்புகளை இரண்டு வாரங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆளுநரிடம் வழங்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்தனர்.
மேலும் இரண்டு வாரங்களில் தமிழ்நாடு அரசு மொழிபெயர்த்த கோப்புகளை வழங்கியதும் உடனடியாக ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவி முடிவு எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.