ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவர் படுகாயம் - இந்து முன்னணி கண்டனம்!
ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவர் படுகாயம் அடைந்த சம்பவத்தில், பள்ளியை முறையாக பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு இந்து இளைஞர் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து இளைஞர் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தங்கள் பகுதியில் செல்படும் அரசு பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து 8ஆம் வகுப்பு மாணவன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல் ஆட்சியில் தான் இச்சம்பவம் அரங்கேறி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அரசு பள்ளி கட்டிடங்கள் மோசமாக இருந்தால் அங்கு பயிலும் மாணவர்களின் உயிருக்கும் கல்விக்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று பொதுமக்கள் கருதுவதாகவும்,
திமுக அரசு விளம்பரம் தேடுவதை விட்டுவிட்டு, சிறிதேனும் மாணவர்களின் நலனுக்காக யோசித்தால் மாணவர்களின் கல்வியும் அவர்களின் உயிரும் காப்பாற்றப்படும் எனவும் இந்து இளைஞர் முன்னணி கூறியுள்ளது.
மேலும் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து தலையில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹரிஷ் என்ற மாணவருக்கு உரிய நிவாரணத் தொகையை பள்ளிக்கல்வித் துறை வழங்க வேண்டும் என தனது அறிக்கையில் இந்து இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது.