ராணுவச்சட்டம் வாபஸ் ஏன்? மக்களின் கடும் எதிர்ப்பால் பணிந்த தென்கொரிய அதிபர் - சிறப்பு தொகுப்பு!
தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் ராணுவச் சட்டத்தை அறிவித்து சில மணி நேரங்களிலேயே தனது முடிவை மாற்றி ராணுவச் சட்டத்தைத் திரும்ப பெற்றார். அதிபர் யூன் சாக் யோல் பதவியில் இருந்து விலக கோரி எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தென் கொரியாவில் என்ன நடந்தது ? என்ன நடக்கிறது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2022ம் ஆண்டு மே முதல் தென்கொரியாவின் 13வது அதிபராக யூன் சுக் யோல் இருந்து வருகிறார். கொரியப் போருக்குப் பின் பிறந்த முதல் தென் கொரிய அதிபர் என்ற பெருமையை யூன் சுக் யோல் பெற்றார். இவரது தலைமையின் கீழ் தென் கொரியா மிகப் பெரிய ஜனநாயகப் பின்னடைவை அடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் யூன் சாக் யோலின் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. வரும் ஆண்டில் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
எதிர்க்கட்சிக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டம் கொண்டுவர படுவதாக அதிபர் யூன் சுக் யோல் திடீரென அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி செய்வதாகவும், வட கொரியாவின் கம்யூனிச சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும், அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவும் அவசரநிலை ராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்படுவதாக அதிபர் யூன் சுக் யோல் தெரிவித்திருக்கிறார்.
மேலும், நாடு போதைப்பொருள் புகலிடமாகவும், நாடாளுமன்றம் குற்றவாளிகளின் கூடாரமாகவும், மாறிவிட்டதை சுட்டிக் காட்டிய அதிபர் யூன் சுக் யோல், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வட கொரியாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தொலைக்காட்சியில் அதிபர் வெளியிட்ட இந்த அறிவிப்பின் போதே, அமெரிக்க டாலருக்கு எதிராக கொரிய வோன் மதிப்பு கடும் வீழ்ச்சியைக் கண்டது. நாடெங்கும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
நாட்டில், ராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு எதிர்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கட்சியினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதிபரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், நாடாளுமன்றத்தில் கூடுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால், தலைநகர் சியோலில் நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் ராணுவம் குவிக்கப் பட்டது.
தென் கொரிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதிபரை கைது செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாடு முழுவதும் அதிபருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதற்கிடையே, நாடாளுமன்றக் கூட்டத்தில், கலந்துகொண்ட உறுப்பினர்கள், ராணுவ ஆட்சி பிரகடனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மொத்தமுள்ள 300 சட்டமன்ற உறுப்பினர்களில் 190 பேர் ராணுவச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
சபாநாயகர் வூ வொன் ஷிக், இந்த சட்டம் சட்டரீதியாக செல்லாது என்றும் மக்களுடன் மக்களாட்சியை காப்போம் என அறிவித்தார். இதனை அடுத்து, 6 மணி நேரத்துக்குள், ராணுவ ஆட்சியை அமல் செய்யும் பிரகடனத்தை திரும்ப பெறுவதாக, அதிபர் யூன் சுக் யோல் அறிவித்திருக்கிறார்.
அதிபர் யூன் சுக் யோல் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை தென்கொரியாவில் வலுத்துள்ளது. அதிபரின் கட்சியினரே அவரைக் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அவரைக் கட்சியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, நாடெங்கும், அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அதிபர் பதவி விலகும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்வேறு தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிபர் உடனடியாக பதவி விலகா விட்டால், 72 மணி நேரத்துக்குள் எதிர்க்கட்சிகள் அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
சட்டரீதியான எந்த நிபந்தனைகளையும் பின்பற்றாமல் அதிபர் அறிவித்த இராணுவச் சட்டம் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது என ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. மேலும் மிகப் பெரிய அரசியல் துரோகம் என்பதால், அதிபரின் பதவி நீக்கத்துக்கு இதுவே போதுமான ஆதாரம் என்றும் தெரிவித்துள்ளது.
அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கு, மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு வாக்களிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் விசாரணை நடத்தப்படும். இது ஒன்பது நீதிபதிகளில் ஆறு நீதிபதிகள் உறுதிப்படுத்தும் தீர்ப்பு நடைமுறைக்கு வரும்.
இந்த செயல்முறை பல மாதங்களுக்கு இழுக்கப்படும் என்பதால், நாட்டில் ஸ்திரமற்ற தன்மை ஏற்படும் என்றும், நாட்டில் குழப்பங்கள் உண்டாகும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
முன்னதாக கடந்த 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு தென் கொரியாவில் ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.