ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை - வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
Advertisement
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
உச்சப்புள்ளி அடுத்த பெருங்குளம் பகுதியில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் அரண்மனை இளங்கோவடிகள் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இதேபோல் கனமழையால் மாவட்ட போக்குவரத்து கழக பணிமனைக்குள் இருந்த இரு பெரிய மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக அப்பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்படாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. அதேபோல, தொடர் கனமழை காரணமாக குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தையை நடத்த முடியாமல் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட காய்கறி மூட்டைகளை, சரக்கு வாகனங்களில் இருந்து இறக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இதனால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.