ரூ.14.2 கோடி மதிப்பிலான 1,424 கிராம் கொகைன் பறிமுதல்!
வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கென்யாவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய சோதனையில், வயிற்றில் மாத்திரை வடிவில் கொகைன் போதைப்பொருளைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ 424 கிராம் கொகைன் போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் 14 கோடியே 20 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெண் பயணியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், பாங்காங்கில் இருந்து வந்த நபர் 7.6 கிலோ எடையுள்ள உயர்ரக கஞ்சாவை உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் வைத்து கடத்தி வந்ததும் கண்டிபிடிக்கப்பட்டது.
அதன் மதிப்பு 76 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.