ரூ. 3500 கோடி செலவில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் - நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
2025-26ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கட்டித் தரப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்து நூறு கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம சாலைகள், 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.
கிராம பகுதிகளில் பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், 25 ஆயிரம் புதிய வீடுகள், 600 கோடி ரூபாயில் கட்டித்தரப்படும் என அறிவித்தார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ஆயிரத்து 87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்ட அவர், பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு 29 ஆயிரத்து 465 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதியளித்தார்.
மேலும், 100 நாள் வேலை திட்டத்திற்காக வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டுமெனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தார்.