ரூ. 6000 கோடியை குப்பையில் வீசிய முன்னாள் காதலி : தவிக்கும் காதலன் - சிறப்பு கட்டுரை!
தனது முன்னாள் காதலி, கவனக் குறைவாக 6000 கோடி ரூபாயை குப்பையில் வீசி இருக்கலாம் என்று ஒருவர் குப்பை கிடங்கில் தேடுவதற்கு, நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். யார் அவர் ? எங்கே நடந்தது இது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
2021 ஆம் ஆண்டு, பிட் காயின்களை மோசடி என்று சொன்ன ட்ரம்ப், அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது , அமெரிக்காவை உலகத்தின் கிரிப்டோ தலைநகராக மாற்றுவதாக உறுதி அளித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து , மின்னணு பணம் எனப்படும் பிட் காயின் மதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த நவம்பர் 21 ஆம் தேதி, முதல் முறையாக பிட் காயினின் விலை 97,000 டாலரை எட்டியது.
இந்நிலையில் , சேமித்து வைத்த பிட்காயின்களைத் தொலைத்து விட்டு தேடித் கொண்டிருக்கிறார் ஒருவர்.
பிரிட்டனின் வேல்ஸ் நியூபோர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹோவெல்ஸ். கவனக் குறைவாக 8000 பிட்காயிங்களைத் தொலைத்து விட்டதாக தெரிகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் இவர் பிட் காயின்களைத் தொலைத்திருக்கிறார். ஜேம்ஸ் ஹோவெல்ஸ் தொலைத்த பிட் காயின்களின் இன்றைய மதிப்பு, சுமார் 6038 கோடி ரூபாயாகும்.
39 வயதான ஜேம்ஸ் ஹோவெல்ஸின் முன்னாள் காதலி, ஹார்ட் டிரைவைத் தூக்கிக் குப்பையில் வீசியதாகவும், அந்த ஹார்ட் டிரைவில், தான் சேமித்து வைத்த பிட் காயின்கள் இணையப் பகுதிக்கான PASSWORD இருந்ததாக ஜேம்ஸ் ஹோவெல்ஸ் கூறுகிறார்.
குப்பைகளை அகற்றுமாறு சொன்ன ஜேம்ஸ் ஒரு கருப்பு சாக்கை தந்ததாகவும்,அ தற்குள் ஹார்ட் டிரைவ் இருந்தது தனக்கு தெரியாது என்றும், ஜேம்ஸின் முன்னாள் காதலி Halfina தெரிவித்துள்ளார். ஹார்ட் டிரைவ் கிடைத்தாலும் தமக்கு எந்த பணமும் தேவையில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கிரிப்டோ கரன்சியின் தன்மை காரணமாக PASSWORD மாற்றி அமைத்து மீண்டும் உள்நுழைந்து பரிவர்த்தனை செய்வது கடினமாகும். ஏனெனில்,வங்கி போன்ற நிதி நிறுவனம் மூலம் இந்த கிரிப்டோ பரிவர்த்தனை மேற்கொள்ளப் படுவதில்லை. எனவே, ஜேம்ஸ் ஹோவெல்ஸால் வாடிக்கையாளர் உதவி மையங்களை அணுகி உதவி கேட்க முடியாது.
குப்பையில் வீசப்பட்ட அந்த ஹார்ட் டிரைவ் , நியூ போர்ட் நகர குப்பை கிடங்கில் இருக்க வாய்ப்புள்ளதாக இன்றும் ஜேம்ஸ் ஹோவெல்ஸ் நம்புகிறார்.
அதனை மீட்டெடுக்க நகர அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஜேம்ஸ் ஹோவெல்ஸ். இது குறித்து சட்டப் படி,நடவடிக்கை எடுக்க போவதாகவும் கூறியிருக்கிறார்.
அந்த குப்பைக் கிடங்கில் சுமார் 110,000 டன் குப்பைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக, ஜேம்ஸ் ஹோவெல்ஸ் தனியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறார். மொத்த பணத்தில் 10 சதவீதத்தை, உள்ளூர் பகுதி மக்களுக்கு நன்கொடையாக அளிக்கப் போவதாகவும் ஜேம்ஸ் ஹோவெல்ஸ் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தொலைந்த பிட்காயின்களை தேட,நகர சபை நிர்வாகம் அனுமதி மறுத்திருக்கும் நிலையில், இன்னொரு லாஸ் வேகாஸ் ஆகவோ துபாய் போலவோ மாறும் வாய்ப்பை, நியூபோர்ட் நகர் இழந்து வருவதாக ஜேம்ஸ் ஹோவெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் நீதிமன்றத்தை நாடும் எண்ணம் இல்லாத தன்னை நியூபோர்ட் நகர சபையின் நடவடிக்கைகளே நீதிமன்றத்தை அணுக வைத்துள்ளது என்று கூறியிருக்கிறார்.
தொலைத்த 6000 கோடி ரூபாய் மதிப்புடைய பிட் காயின்கள் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு கூறும் ஜேம்ஸ் ஹோவெல்ஸ் , அப்போது அதன் மதிப்பு, சுமார் ஒரு பில்லியன் பவுண்டாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த பிட் காயின் வழக்கு, கார்டிஃப் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.