ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் கோலாகலம்!
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கோபியர்களுடன் ஊர் சுற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த நம்பெருமாளை தாயாரின் துவாரபாலகிகள் மட்டையால் அடித்து விரட்டியதாகவும், பின்னர் நம்மாழ்வார் இருவரையும் சமரசம் செய்து வைத்ததாகவும் ஐதிகம்.
இந்த நிகழ்வையொட்டி மயிலாடுதுறையில் உள்ள பரிமள ரங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் நடைபெற்றது. இதில், உற்சவர் ரங்கநாதர் பெருமாளை பக்தர்கள் சுமந்து கொண்டு கோயிலுக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது, அங்கே வாழை மட்டையை வைத்துக்கொண்டு நின்றவர் மட்டையால் அடித்து விரட்டினார். பின்னர், கட்டை கோபுர வாசல், தாயார் சன்னதி வாசல்களை கடந்து உள்ளே சென்ற பெருமாள், நம்மாழ்வாரிடம் உதவி கேட்டார்.
நம்மாழ்வார் தாயாரிடம் பேசி சமரசம் செய்து வைத்த ஐதீக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.