வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை!
வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்க மாநிலத்தில் மீண்டும் வன்முறை அரங்கேறியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
Advertisement
வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாதில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறையில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கர் பகுதியில் நேற்று, மதச்சார்பற்ற முன்னணியினர் போராட்டத்தில் இறங்கினர். இதில் பங்கேற்க மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள், மத்திய கொல்கத்தாவில் உள்ள ராம்லீலா மைதானத்தை நோக்கிச் சென்றனர்.
அப்போது, போலீசாருக்கும், மதச்சார்பற்ற முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
நிலைமை மோசமானதால் போலீசார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இருப்பினும் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.