வக்பு சட்ட மசோதா சொல்வது என்ன?
நாடாளுமன்றக் கூட்டுக்குழு விரைவில் தமது அறிக்கையை வழங்கவுள்ளதால் வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனல்பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தப் போகும் அந்த மசோதாவில் அப்படி என்ன இருக்கிறது? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்..!
Advertisement
இஸ்லாமிய மக்கள் இறையருள் வேண்டி மசூதிகள், தர்க்காக்கள் மற்றும் மதரஸாக்களுக்கு தானமாக வழங்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வக்பு சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக நிலங்களை கொண்டிருப்பவை வக்பு வாரியங்கள்தான். ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை உள்ளடக்கிய 8 லட்சத்து 70 ஆயிரம் சொத்துகள் வக்பு வாரியங்கள் வசமுள்ளன. இவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்.
இந்த சொத்துகளை கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி 1954-ஆம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் 1958-ஆம் ஆண்டு வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. பிறகு 1995-ஆம் ஆண்டு வக்பு சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் வக்பு வாரியம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், அதன் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும் வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரவேண்டியது அவசியம் என்று கருதி அதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
அதன்படி, வக்பு வாரியத்துக்கு நிலத்தை கொடுப்பவர் குறைந்தது 5 ஆண்டுகளாவது இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும்.
வக்பு வாரியத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க புதிய மசோதா வழி செய்கிறது. வக்பு கவுன்சில் மற்றும் மாநில அளவிலான வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்படுகிறது.
அதே போல் வக்பு சட்டம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படுகிறது. அவர் இஸ்லாமியராக இல்லாவிட்டாலும் வக்பு வாரிய சொத்து பிரச்னைகளில் இறுதி முடிவு எடுக்க முடியும்.
புதிய மசோதாவின்படி வக்பு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரம் கூடுதல் ஆணையரிடம் இருந்து பெறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரிடம் வழங்கப்படுகிறது.
வக்பு நிலங்களை டிஜிட்டல் முறையில் பட்டியலிடவும், வக்பு நிலமாக அறிவிக்கப்படும் முன்பு சம்மந்தப்பட்டவருக்கு தகவல் தெரிவிக்கவும் மசோதா வழி செய்கிறது.
இதுபோன்ற பல்வேறு திருத்தங்களைக் கொண்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்ப்பு எழுந்தது. வக்பு வாரிய சொத்துகளை முஸ்லிம்களிடம் இருந்து பறிக்கும் முயற்சி இது என இஸ்லாமிய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டியதை அடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்காக வக்பு மசோதா அனுப்பப்பட்டது.
தமது அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விரைவில் வழங்க இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடரிலேயே வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது. வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.