வங்கக்கடலில் உருவான புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 30-ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக்கடலில் உருவான புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு புயலாக வலுப்பெற்றதாக தெரிவித்தார். இந்த புயல் 30 ஆம் தேதி பிற்பகல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும் அவர் கூறினார்.
இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.
வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த தரைகாற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் மற்றும் அவ்வப்போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் அவர் தெரிவித்தார். கடலோர மாவட்டங்களில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வரை கூட காற்றின் வேகம் இருக்கும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். மீனவர்கள் அடுத்து வரும் 2 தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.