வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது : அதிருப்தியில் இந்தியா - சிறப்பு கட்டுரை!
வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்கான் அமைப்பின் துறவியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
வங்க தேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டு பிரச்சனை அரசு எதிர்ப்பு போராட்டமாக நாடெங்கும் பரவியது. இதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி,பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.
அதனை தொடர்ந்து, வங்க தேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்றது. அப்போதிருந்து, வங்கதேசத்தில் வாழும் 8 சதவீத சிறுபான்மை இந்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக பல இந்துக் கோயில்கள் இடிக்கப் பட்டன. இந்துக்கள் மீது சுமார் 200 க்கும் மேற்பட்ட வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்துக்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தீ வைக்கப் பட்டன.
வங்க தேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் தாக்கப் படுவதை இந்தியா கடுமையாக கண்டித்தது. மேலும் நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும் என்று முகமது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், வங்க தேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக கூறி, அந்நாட்டில் உள்ள இந்து மத துறவி சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டதில் இருந்து வங்க தேசத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முகமது யூனுஸ் அரசு, இஸ்கான் ஒரு மத அடிப்படைவாத அமைப்பு என்றும், அதை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தது. கடந்த வியாழக் கிழமை, வங்க தேசத்தில் இஸ்கானை தடை செய்ய தானாக முன்வந்து உத்தரவு பிறப்பிக்க வங்கதேச உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி வங்க தேச இஸ்கான் அமைப்பின் உறுப்பினரும் அல்ல, செய்தித் தொடர்பாளரும் அல்ல என்றும், பிரம்மச்சாரியின் கருத்துகள் எதுவும் இஸ்கானின் கருத்துக்கள் அல்ல என்றும், இஸ்கான் பொதுச் செயலாளர் சாரு சந்திர தாஸ் தெரிவித்திருக்கிறார்.
மேலும், சிட்டகாங்கில் வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் அலிஃப் உயிரிழப்புக்கு இஸ்கானை தவறாக தொடர்புபடுத்துவதை மறுத்த இஸ்கான் பொதுச் செயலாளர், நாட்டில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் இஸ்கானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில், இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இந்திய அரசு வங்கதேச அரசை வலியறுத்தி உள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிரதமர் மோடியைச் சந்தித்து விவாதித்திருக்கிறார்.
எனவே, இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே வங்க தேச இந்துக்களுக்கான பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.