வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா? - முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!
வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா என தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "நமது அண்டை நாடான வங்கதேசத்தில் நிகழக்கூடிய அசாதாரண சூழலில், இந்து சமுதாயத்தைச் சார்ந்த அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற விதமாக, பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பிற மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசாங்கம் அனுமதி மறுத்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தொண்டர்கள் மற்றும் தலைவர்களை கைது செய்ததன் மூலம், ‘போலி திராவிட மாடல்’ அரசானது பாசிச அரசு என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துவிட்டது.
தமிழக முதல்வர் அவர்களே, உக்ரைனிலும், பாலஸ்தீனத்திலும் நடக்கின்ற போர்களில் இறந்து போகிறவர்கள் மட்டும் தான் மனிதர்களா? நமது அண்டை தேசத்தில் அப்பாவிகளாய் கொல்லப்படுகின்ற இந்து மக்கள், உங்கள் கண்களுக்கு மனிதர்களாகத் தெரியவில்லையா?
தொடர்ச்சியாக இதுபோன்ற பாசிச போக்கோடு செயல்பட்டு வரும் இந்த ‘போலி திராவிட மாடல்’ அரசிற்கும், அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற தமிழக காவல் துறைக்கும், எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.