வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு - சிறப்பு தொகுப்பு!
டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஹரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஹிமாச்சலம்பிரதேசத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகியுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வரும் 3-ம்தேதி குளிர் அலை வீச வாய்ப்புள்ளதாகவும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அடர் பனி நிலவும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சண்டிகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவானது.
ஹிமாச்சலப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை உறைநிலைக்கு கீழ் சென்றதால், நீர் நிலைகள் உறைய தொடங்கியுள்ளன. பல இடங்களில் பனிப்பொழிவும் நிலவுகிறது.
ஜம்மு - காஷ்மீரில் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் சுமார் மைனஸ் 3 புள்ளி 8 சென்டிமீட்டருக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. புட்காம் மாவட்டத்தில் ஒன்று புள்ளி 7 சென்டிமீட்டரும், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சமவெளிகளில் சுமார் மைனஸ் 4 புள்ளி 3 சென்டிமீட்டரும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன. சாலையில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகளிலும் கடுங்குளிர் நிலவி வருகிறது. மலை சுற்றுலா தலமான மவுண்ட் அபுவில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்தது. வாகனங்கள், புல்வெளிகள் என அனைத்தும் பனியால் மூடப்பட்டு காட்சியளிக்கின்றன.
இதேபோன்று, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவிலும் மூடுபனி நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.