வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏன்? சிறப்பு தொகுப்பு!
வடிவமைப்பு மாற்றங்கள் காரணமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் உற்பத்தியில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது. என்ன மாதிரியான புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. நாடெங்கும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஸை தொடர்ந்து வந்தே பாரத் சேர் கார் (CHAIR CAR ) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிப்பதில் இந்திய ரயில்வே வேகமாக செயல்பட்டு வருகிறது.
நீண்ட தூர பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான ஸ்லீப்பர் ரயில்களில் இருந்து வேறுபட்ட உயர்தர நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாராகி வருகின்றன.
அதிவேகம் மற்றும் அதீத செயல்திறன், நவீன உள்வடிவமைப்பு, உயர் ரக குளிர் சாதன வசதிகள், வைஃபை மற்றும் INFOTAINMENT அமைப்புக்கள், USB சார்ஜிங் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் அமைப்புகள் மற்றும் பயண பாதுகாப்பு என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் அமைக்கப்பட்டுள்ளன.
மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் 11 ஏசி மூன்றடுக்கு, நான்கு ஏசி இரண்டு அடுக்கு மற்றும் ஒரு ஏசி முதல் வகுப்பு,என மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் சுமார் 823 பயணிகளுக்கான பெர்த்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2023ம் ஆண்டு, 55,000 கோடி ரூபாய் மதிப்பிலான 200 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கான விநியோக மற்றும் பராமரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.1,920 வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளைத் தயாரிப்பதற்கு Transmashholding என்ற ரஷ்ய நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் முன்மாதிரி வரும் என்று திட்டமிடப் பட்டிருந்தது. இந்தச் சூழலில், இந்திய ரயில்வே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வடிவமைப்பில் புதிய திருத்தங்களை முன் வைத்தது. கூடுதல் கழிப்பறைகள், லக்கேஜ் மண்டலங்கள் மற்றும் ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு பேண்ட்ரி கார் உள்ளிட்ட இந்த மாற்றங்களைச் செய்வதற்கு ரஷ்ய நிறுவனம் ஒப்புக் கொண்டது.
ஆனால், எதிர்கால சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக புதிய ஒப்பந்தம் போடுமாறு இந்திய ரயில்வே துறைக்கு ரஷ்ய நிறுவனம்கேட்டு கொண்டுள்ளது. இதற்கான ஒப்புதல் இந்திய ரயில்வே துறையின் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாகவே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லியில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில், இந்திய-ரஷ்ய உயர் அதிகாரிகள் இடையேயான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிப்பு தாமதமாவதற்கான காரணங்கள் பற்றி விவாதிக்கப் பட்டதாக கூறப் பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் உற்பத்தியை தொடங்க உள்ளதாக ரஷ்ய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Kirill Lipa தெரிவித்துள்ளார்.
நவீனமயமாக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கு இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் எனத் தெரியவருகிறது