வலுவடையும் கடற்படை! : சீனாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த மோடி!
இந்திய கடற்படைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மூன்று போர்க்கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை சீனாவுக்கு விடுத்திருக்கும் மறைமுக எச்சரிக்கை என்கிறார்கள் புவிசார் அரசியல் வல்லுநர்கள்.
1949-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியாக ஜெனரல் கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார். அதை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15-ஆம் இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து வீரமரணம் அடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். மேலும் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடைபெறும். அதன்படி 77-ஆவது ராணுவ தினம் மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் நடைபெற்றது. முன்பு தலைநகர் டெல்லியில் மட்டுமே நடைபெற்று வந்த ராணுவ தின கொண்டாட்டங்கள் அண்மைக்காலமாக நாட்டின் பிற இடங்களிலும் நடத்தப்படுகின்றன. மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே புரிதலையும் நல்லுறவையும் ஏற்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முறை புனேவில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது.
ராணுவ தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வீரர்களின் உயிர்தியாகத்தை நாடு நன்றியுடன் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார். மேலும் ராணுவத்தினரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு உத்வேகமாக இருக்கட்டும் என்றும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
இதே போல் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கோடிக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனைப் பேணுவதில் அரசு உறுதியோடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராணுவ தினத்தை முன்னிட்டு INS SURAT, INS NILGIRI, INS VAGHSHEER ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று கப்பல்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல்கள் மூலம் கடற்படை வலுவடையும்.
INS சூரத் போர்க்கப்பல் P15B எனப்படும் GUIDED MISSILE DESTROYER திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதி கொண்ட INS சூரத் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் மற்றும் BARAK-8 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை செலுத்த முடியும்.
INS நீல்கிரி போர்க்கப்பல் கடலில் எத்தகைய சூழல் இருந்தாலும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும். குறிப்பாக எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிரிகளின் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கண்டுபிடித்துவிடும். மேலும் அவற்றை தாக்கி அழிப்பதற்கான ஆயுதங்களும் இதில் உள்ளன.
P75 SCORPENE திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் INS VAGHSHEER. இதன்மூலம் கடலுக்கு அடியில் இருந்து தாக்குதல் நடத்த முடியும்.
3 போர்க்கப்பல்களையும் நாட்டுக்கு அர்பணித்த பிறகு பேசிய பிரதமர் மோடி, உலகின் முக்கிய கடல்சார் வல்லரசாக இந்தியா வளர்ந்து வருகிறது என்றார். நம் நாட்டின் செயல்பாடுகள் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதே தவிர, விரிவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என மோடி தெரிவித்தார். இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் பிரதமர் கூறினார். இதன்மூலம் கடல் மற்றும் நிலப்பரப்பில் அவ்வப்போது எல்லை மீறலில் ஈடுபடும் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக புவிசார் வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் QUAD கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது. இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க QUAD கூட்டமைப்பு விரும்பும் நிலையில் பிரதமர் மோடியின் பேச்சு புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.