For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்!

05:01 PM Jan 18, 2025 IST | Murugesan M
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது   பிரதமர் மோடி பெருமிதம்

வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி இன்று 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் வழங்கினார்.

Advertisement

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,

இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று குறிப்பிட்டார். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொத்து அட்டைகளைப்   பெறுவதை உறுதி செய்வதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வாமித்வா திட்டம் தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

Advertisement

கடந்த 5 ஆண்டுகளில் 1.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஸ்வாமித்வா அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார். ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், கிராமங்களில் சுமார் 2.25 கோடி மக்கள் தற்போது தங்கள் சொத்துகளுக்கான சட்ட ஆவணங்களைப் பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, சுகாதார நெருக்கடிகள், தொற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை 21-ம் நூற்றாண்டு முன்வைக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், உலகம் எதிர்கொள்ளும் மற்றொரு குறிப்பிடத்தக்க சவால் சொத்துரிமை பிரச்சினை, சட்டப்பூர்வ சொத்து ஆவணங்கள் இல்லாதது என்று குறிப்பிட்டார்.

பல்வேறு நாடுகளில் உள்ள பலரிடம் தங்கள் சொத்துக்களுக்கான முறையான சட்ட ஆவணங்கள் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வை பிரதமர் மேற்கோள் காட்டினார். வறுமையைக் குறைப்பதற்கு மக்களுக்கு சொத்துரிமை தேவை என்பதை ஐநா வலியுறுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

கிராமவாசிகளுக்குச் சொந்தமான சிறிய அளவிலான சொத்துக்கள் பெரும்பாலும் உயிரற்ற மூலதனம் என்று கூறினார். இதன் பொருள் சொத்தை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது எனவும் மேலும் அது குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்க உதவாது என்றும் அவர் கூறினார்.

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தபோதிலும், கிராம மக்களிடம் பெரும்பாலும் சட்ட ஆவணங்கள் இல்லை எனவும் இது தகராறுகளுக்கு வழிவகுத்தது என்றும் சக்திவாய்ந்த நபர்களால் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு கூட வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்ட ஆவணங்கள் இல்லாமல், வங்கிகளும் அத்தகைய சொத்துக்களிலிருந்து விலகி உள்ளன என்று அவர் கூறினார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முந்தைய அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஸ்வாமித்வா திட்டம் மூலம் சொத்து ஆவணங்களை உருவாக்க 2014-ல் அரசு முடிவு செய்ததாக அவர் கூறினார். இந்தியாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன எனவும் அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்புகள் முடிக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சட்ட ஆவணங்களைப் பெற்ற பிறகு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொத்துக்களின் அடிப்படையில் வங்கிகளில் கடன் பெற்று, தங்கள் கிராமங்களில் சிறு தொழில்களைத் தொடங்கியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இந்த பயனாளிகளில் பலர் சிறு, நடுத்தர விவசாய குடும்பத்தினர் என்றும், அவர்களுக்கு இந்தச் சொத்து அட்டைகள் பொருளாதாரப் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க உத்தரவாதமாக மாறியுள்ளன என்றும் அவர் கூறினார்.

சொத்துகள் தொடர்பான நீண்டகால தகராறுகளால் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். சட்ட சான்றிதழுடன், அவர்கள் இப்போது இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவார்கள் என்று அவர் கூறினார். அனைத்து கிராமங்களிலும் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டால், 100 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளை அது ஏற்படுத்தும் என்று ஒரு மதிப்பீட்டை அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான மூலதனம் சேர்க்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

ஸ்வாமித்வா திட்டம் கிராம வளர்ச்சித் திட்டமிடலையும் செயல்பாட்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தியுள்ளது என்று எடுத்துரைத்தார். சொத்து அட்டைகள் கிராமங்களில் பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் எனவும் தீ, வெள்ளம் நிலச்சரிவு போன்ற சம்பவங்களின் போது இழப்பீடு கோருவதை எளிதாக்கும் என்றும் அவர் கூறினார்.

"கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு பெரிய திட்டத்திலும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மையமாக இருக்கிறது எனவும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்கை அரசு அங்கீகரித்துள்ளது என்றும் நரேந்திர மோடி கூறினார்.

வங்கித் தோழி (பேங்க் சகி), பீமா சகி போன்ற முன்முயற்சிகள் கிராமங்களில் பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் கீழ் 1.25 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாகி உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஸ்வாமித்வா திட்டம் பெண்களின் சொத்து உரிமைகளை வலுப்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய  நரேந்திர மோடி, சொத்து அட்டைகளில் கணவரின் பெயருடன் மனைவியின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்றார்.

ஸ்வாமித்வா திட்டம் கிராமவாசிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது என்றும், இந்தியாவில் கிராமப்புற வாழ்க்கையை மாற்றியமைக்கும் திறன் கொண்டது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கிராமங்களும், ஏழைகளும் வலிமையடையும் போது, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணம் சுமூகமாக இருக்கும் என்று அவர் கூறினார். கிராமங்கள், ஏழைகளின் நலனுக்காக கடந்த பத்து ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வர உதவியுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.  ஸ்வாமித்வா போன்ற திட்டங்கள் கிராமங்களை வலுவான வளர்ச்சி மையங்களாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement
Tags :
Advertisement